'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்’ - வி.சி.க. எம்.எல்.ஏ. ஷா நவாஸ்
காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் ஆர்.எஸ்.எஸ். வழியில் பயணிப்பதுதான், காங்கிரஸ் சந்திக்கும் சிக்கல் என்று ஷா நவாஸ் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷா நவாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, 'காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு' ஒப்பிடுகிறார்.
60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.
'காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது' என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பதுதான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.
'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது.
ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் ஆர்.எஸ்.எஸ். வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.