இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை : டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
மீனவர்களையும் , மீன்பிடி படகுகளையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாருக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினர், அவர்களின் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக மீன்பிடிக்கும் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அத்துமீறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதும், எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன்னுடைய கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நாளில் கூட கண்ணீரில் மூழ்கியிருக்கும் சூழல் நிலவுவதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் நீண்டகாலமாக வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்தார் .