நெல்லை: கொலை முயற்சி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு

நெல்லையில் கொலை முயற்சி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.;

Update:2025-03-29 18:05 IST

கடந்த 2014-ம் ஆண்டு தெற்கு வள்ளியூரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வயர் திருடு போயுள்ளது. அதனை தெற்கு வள்ளியூர், வடக்கு தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 45) என்பவர், அதே ஊரைச் சேர்ந்த முத்துராமன் (வயது 35) என்பவர் வயரை திருடியதாக முருகனிடம் கூறியுள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு 2014 ஆகஸ்ட் 14-ம் தேதி பாலசுப்பிரமணியன் தெற்கு வள்ளியூர் அம்மன் கோவில் பகுதியில் உள்ள அங்கன்வாடி அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்துராமன் பாலசுப்பிரமணியனிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி, அரிவாளால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் பணகுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து முத்துராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.3.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பர்சத் பேகம் தீர்ப்பு வழங்கினார். அதில் முத்துராமனுக்கு 7 ஆண்டுகள் கிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் பணகுடி போலீசாரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்