தமிழகத்தில் தொழில் தொடங்க புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.;

Update:2025-09-08 09:43 IST

'தமிழ்நாடு வளர்கிறது’ (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின்கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தினார். இந்த பயணத்தின்போது தமிழகத்திற்கு மொத்தம் ரூ. 15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

ஒருவாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு தமிழகம் திரும்பியுள்ளேன். இந்த பயணம் மாபெரும் வெற்றிபயணமாக அமைந்துள்ளது. மொத்தம் ரூ. 15 ஆயிரத்து 516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

தமிழகம் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. ஏற்கனவே உள்ள 17 நிறுவனங்களும் மற்ற மாநிலங்களை நோக்கி செல்லாமல் தமிழ்நாட்டிலேயே தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தை நோக்கி நிறைய முதலீடுகளை கொண்டு வர முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதலீடுகளை தாண்டி நல்லுறவுக்காக ஒன்று கூடிய தருணமாக இந்த பயணம் அமைந்தது

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்