விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் கூட்டம் சேர்க்க அனுமதியில்லை
பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்.;
கோவை,
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
இதற்காக, சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். விஜய்யை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். காலை முதலே தொண்டர்கள் பொதுக்கூட்ட இடத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய் கோவை விமான நிலையம் வரவுள்ள நிலையில், அங்கு பயணிகளுக்கு இடையூறாகவும், பொருட்களை சேதப்படுத்தாமலும் இருக்க போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
விமான நிலையத்தில் கூட்டம் சேர்க்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் கோவை விமான நிலைய நுழைவு வாயிலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளை தவிர தேவையில்லாமல் உள்ளே வருபவர்களை போலீசார் விசாரித்து திருப்பி அனுப்புகின்றனர்.