சென்னை: காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் நேற்று பா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் ஆளுநர் இல. கணேசனின் இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும், சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திற்கு சென்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.