கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 22 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேரும், காங்கிரஸ், பா.ஜனதா கவுன்சிலர்கள் தலா ஒருவரும், தி.மு.க. ஆதரவு சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரும் என மொத்தம் 33 பேர் உள்ளனர்.
நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பரிதா நவாப்பும், துணைத்தலைவராக சாவித்திரி கடலரசு மூர்த்தியும் இருந்து வருகிறார்கள். கடந்த மாதம் 16-ந்தேதி தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவு சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 23 பேர் தலைவரின் செயல்பாடுகள் நகராட்சிக்கும், அரசுக்கும் எதிராக உள்ளது என பல்வேறு புகார்களை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாரிடம் வழங்கினார்கள்.
இதையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. ஆணையாளர் சதீஷ்குமார் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தார். அதன்படி தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 27 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
இதையடுத்து தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து புதிய தலைவர் தேர்வு நடைபெறும் நாள் குறித்து அரசு முறையாக அறிவிப்பு வெளியிடும் என தெரிவித்தனர்.