அனைத்து பள்ளிகளிலும் கல்விசார் செயல்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: கல்வித் துறை
தங்கள் நிர்வாக எல்லைக்குள் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயண திட்டங்களை தயாரித்து ஆய்வு செய்யவேண்டும்.;
சென்னை,
தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை நிலை மதிப்பீடுகளின் முடிவுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளியை குறித்து, ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாக கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பள்ளிகளில் கல்விசார்ந்த செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பறை நடைமுறைகள், ஆசிரியர்கள் மாணவர்கள் வேலை புத்தகம், ஆசிரியர்கள் வேலை புத்தகம் பயன்படுத்தும் விதம், மாணவர்களின் பங்கேற்பு நிலை, தனிப்பட்ட கற்றல் வழிகாட்டல் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். மேலும் மாதாந்திர மற்றும் காலாண்டு மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் முன்னேற்றம் பதிவு செய்யப்படவேண்டும். பயிற்சியில் கற்ற அறிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதையும் உறுதி செய்யவேண்டும். இதனை தங்கள் நிர்வாக எல்லைக்குள் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயண திட்டங்களை தயாரித்து ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.