புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
சென்னை புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.;
மலையாள மொழி பேசும் கேரள மக்களால் நாளை (வெள்ளிக்கிழமை) ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் கேரள மக்களை அன்பு பாராட்டும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், முதலில் பெற்றோர் மத்தியில் அத்தப்பூ கோலப்போட்டி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஓணம் கொண்டாட்டம் தொடங்கியது. நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் டி.தங்கமுத்து தொடங்கி வைத்தார்.
மாணவ-மாணவிகளின் நடனம், பேச்சு, மேடை அணிவகுப்பு ஆகியவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோரை வெகுவாக கவர்ந்தது. நிறைவாக, அத்தப்பூ கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியைகள் செய்திருந்தனர்.