ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசின் விதிமுறை செல்லும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.;
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டுக் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதார் எண்ணை இணைத்ததுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து இந்த வழக்கானது நீதிபதிதகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமிர்த திவாரி, வழக்கறிஞர் அரவிந்த ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்திருந்த நேர கட்டுப்பாடு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.