பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
துவரம் பருப்பு, பாமாயிலை தமிழ்நாடு அரசு மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேஷன் கடைகளில் சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய்யை (பாமாயில்) மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு, பாமாயிலை மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான பருப்பு மற்றும் பாமாயில், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000படி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60,000 டன் துவரம் பருப்பு, 60,000 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.