வேலூர் கோட்டையில் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்
அழகிய அகழியுடன் வேலூர் கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையது.;
வேலூர்,
வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகளில் வேலூர் கோட்டை முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த கோட்டை பல்வேறு மதங்களின் சங்கமமாக திகழ்கிறது. ஜலகண்டேஸ்வரர் கோவில், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் மசூதி ஆகியவை ஒரே வளாகத்திற்குள் உள்ளது. அழகிய அகழியுடன் இந்த கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையது.
சுதந்திர போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய இந்த கோட்டையை சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் கோவில், தேவாலயம், அரசு அருங்காட்சியகம், கோட்டை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். கோட்டை மேல்பகுதி நடைபாதையில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சென்று அங்குள்ள மதில் சுவரில் ஏறி நகரின் அழகைக் கண்டு ரசிக்கின்றனர். அப்போது ஒரு சிலர் ஆபத்தை உணராமல் அகழி கரையோரம் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மேல் ஏறி ஆபத்தான முறையில் செல்பி எடுக்கின்றனர்.
நேற்று கோட்டையை சுற்றி பார்க்க வந்த இளைஞர்கள் ஆபத்தை உணராமல் கொத்தளத்தின் அருகே அகழி கரையோரம் உள்ள மதில் சுவரில் ஏறி வரிசையாக நின்று புகைப்படம் எடுத்தனர். மேலும் அவர்கள் அங்கும் இங்குமாக அந்த சுவரில் விளையாடி வந்தனர். ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தாலும் ஒரு சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அடிக்கடி கோட்டை மேல்பகுதி நடைபாதையில் ரோந்து சென்றால் இது போன்ற செயல் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.