பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.;

Update:2025-12-15 11:56 IST

செனை,

திருச்சியை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர். இவர்தான் போரிட்ட எந்த ஒரு போரிலும் தோற்றதில்லை என வரலாற்றில் எழுதப்பட்டு உள்ளது. இவரது நினைவாக தபால்தலை வெளியிட வேண்டுமென அந்த சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழக அரசு சார்பிலும், தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.

இந்த நிலையில், பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிட்டமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், அதிமுக சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்