மெட்ரோ வளாகத்தில் பூங்கா.. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.;
சென்னை,
சென்னை மெட்ரோ வளாகத்தில் உள்ள பூங்காவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
”சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையக வளாகத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3,588 சதுரமீட்டர் பரப்பளவிலான திறந்தவெளி நிலத்துடன் (OSR) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான நிலப்பகுதியையும் உள்ளடக்கி மொத்தம் 3,750 சதுரமீட்டர் நிலப்பகுதியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டு மைதானத்தில் 3 பூப்பந்து விளையாட்டு அரங்குகள் மற்றும் 2 பிக்கிள் பந்து திறந்துவெளி விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மெட்ரோஸ் பூங்காவை சுற்றி 370 மீ நீளம் கொண்ட நடைபகுதி மற்றும் 8 வடிவ நடைபகுதி, பிரத்யேக சிறுவர்கள் விளையாட்டு பகுதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், உள் அமர்வு மற்றும் வெளியரங்க அமர்வு பகுதிகள் (indoor & outdoor seating area), இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பூங்கா பகுதியில் 20 எண்ணிக்கையிலான மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் பூங்காவில் உருவாகும் இலை, தழைகளை மக்கி உரமாக்க 3 எண்ணிக்கையிலான கம்போஸ்ட் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா மற்றும் விளையாட்டு அரங்குகளை பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக அணுகி பயன்படுத்திட ஏதுவாக, அண்ணா சாலையினை ஒட்டி பிரத்யேக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பூங்காவினையும் மற்றும் விளையாட்டு அரங்குகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (23.01.2026) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையக வளாகத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோஸ் பூங்கா, பூப்பந்து மற்றும் பிக்கிள் விளையாட்டு மைதானங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.