ஓய்வூதிய திட்டம்: முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு
அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நெல்லை முபாரக் தெரிவித்துள்ள்ளார்.;
சென்னை,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய விவகாரத்தில் 23 ஆண்டுகளாக நீடித்த குழப்பத்திற்கும், நீண்ட போராட்டத்திற்கும் தீர்வு காணும் விதமாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) மிகவும் வரவேற்கத்தக்கது.
ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், அமைச்சர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் கடைசி ஊதியத்தின் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவும், ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும். மேலும், ஓய்வூதியதாரர் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியமாக 60% வழங்கப்படும்; ஓய்வு அல்லது பணிக்கால மரணத்தில் அதிகபட்சம் ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும். முதல்-அமைச்சர் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களும் ஏற்றுக்கொண்டு தங்களது போராட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கண்டு, அவர்களின் நலனை முன்னிறுத்தி, நிதி சுமையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.”
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.