“தி.மு.க. ஆட்சி மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும்..” - டி.கே.எஸ்.இளங்கோவன்
தமிழ்நாடு முன்னேறக்கூடாது என்பதே பா.ஜ.க.வின் எண்ணம் என தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
செய்தியாளர்கள் சந்திப்பில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-
மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்க முடியாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நேரடியாக மக்கள் தங்கள் கருத்துக்களை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு தெரிவிக்கும் வசதியை செய்திருக்கிறோம். மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதை செய்வதற்காகத் தான் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும்.
எல்லா காலத்திலும் மக்களுக்காக நாங்கள் மக்களுடன் நாங்கள் என்று எங்கள் முதல் அமைச்சர் சொல்வது போன்ற நிலையில் நாங்கள் எங்கள் பணியை தொடங்கி இருக்கிறோம். நீட் தேர்வில் ஏற்கனவே இருந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை உருவாக்கி அதன் மூலம் நீட் தேர்வை விலக்க முடியாத அளவிற்கு மத்திய அரசு செய்துள்ளது. மேலும், அவர்கள் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வுக்கான கேள்வித் தாள்களை வெளியாக்கி அவர்கள் ஆளும் மாநில மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கிடைக்கும் வகையில் சில திட்டங்களை செய்து வருகிறார்கள் என்ற தகவல்கள் எல்லாம் வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளில் சுமார் 90 சதவீதம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேறாததற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் தான் காரணம். தமிழ்நாடு முன்னேறக்கூடாது, தமிழர்களுக்கு எந்த முன்னேற்றமும் இருக்கக் கூடாது என்பது தான் பா.ஜனதாவின் எண்ணம். அதன் விளைவாகத் தான் பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டிய எய்ம்சை கூட இன்னும் திறக்கவில்லை. தமிழ்நாட்டில் எந்தவிதமான முன்னேற்றமும் வரக்கூடாது என்பது பா.ஜனதாவின் எண்ணம் அதன்படிதான் தமிழர்களை அவர்கள் எப்போதும் புறக்கணித்து வருகிறார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகள் தேர்தல் அறிவிப்புகள் வெளிவருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் நடைபெறும். ஆனாலும், அனைவரும் எங்கள் கூட்டணியில் தொடர்வார்கள். இனிமையான எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவை எங்கள் தலைவர் எடுப்பார். தி.மு.க.வுடன் தான் எங்கள் கூட்டணி என்பதை காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் கிரிஷ்சோடங்கர் மிக வெளிப்படையாகவும், உறுதியாகவும் சொல்லி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கான செயற்கை நுண்ணறிவு போர்ட்டல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.