பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்க பணம்; அறிவிப்பு இன்று வெளியாகிறது

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா?, ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.;

Update:2026-01-04 04:32 IST

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது.

இந்த அறிவிப்பை கேட்டு, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா?, ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முறையான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3,000 ரொக்க பணம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் எட்டாம் தேதி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற இருக்கிறது.

திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த உடன் தமிழக முழுவதும் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் பச்சரிசி சர்க்கரை கரும்புடன் மூன்றாயிரம் ரொக்க பணம் வழங்கும் பணி தொடங்கும். ஒவ்வொரு நாளும் சுமார் நானூறு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 3,000 ரொக்க பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 14ஆம் தேதிக்குள் ரூ 3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை முழுமையாக வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்