பரபரக்கும் அரசியல் களம்... அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க பாஜக திட்டம்
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்புடன் இயங்கி வருகிறது.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கிறது. பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் போல அரசியல் கட்சிகள் பரபரப்புடன் இயங்கி வருகிறது. கூட்டணி அமைப்பதிலும், கட்சியை பலப்படுத்துவதிலும் மிக கவனமாக திட்டம் வகுத்து செயல்படுகிறார்கள். அந்தவகையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜனதா இந்தமுறை அதிக தொகுதிகளை கேட்டுபெற தீர்மானித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலேயே பா.ஜனதா அங்கம் வகித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணியில் இருந்த பா.ம.க.வுக்கு 23, பா.ஜனதாவுக்கு 20, த.மா.கா.வுக்கு 6 தொகுதிகளும், 6 சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கியது.
இதில் அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களை கைப்பற்றின. அதில் அ.தி.மு.க. மட்டும் 66 இடங்களிலும் பா.ம.க. 5, பா.ஜனதா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதன்பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பா.ஜனதா தங்களது தலைமையில் ஒரு அணியை உருவாக்கியது. இதில், பா.ம.க. இடம்பெற்றது. அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் தனி அணியை அமைத்தது. அந்த கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றது.
அந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் பல இடங்களில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்திற்கு வந்தது. தமிழகம் முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் சட்டசபை தொகுதி வாரியாக 81 தொகுதிகளில் பா.ஜனதா 2-ம் இடத்தை பிடித்து, அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த 81 தொகுதிகளில் இருந்து வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பா.ஜனதா தேர்வு செய்து வைத்துள்ளது. அதில் இருந்து 45 தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்டுப்பெற பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட கூடுதலாகும்.
அதே நேரத்தில் அ.தி.மு.க. தரப்பு, கடந்த முறை ஒதுக்கிய 20 இடங்களை மட்டும் தான் தர முடியும் என்று சொல்லி வருகிறது. தொடர்ந்து பா.ஜனதா கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக, 24 தொகுதிகள் வரை பா.ஜனதாவுக்கு ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால் 45 இடங்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது.
இதற்கிடையே, கூட்டணிக்கு பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க. வரும் பட்சத்தில் அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்து முடிவு செய்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. தற்போது பா.ஜனதாவிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே கூடுதல் இடங்களை அ.தி.மு.க.விடம் கேட்பதில் தவறில்லை. 81 சட்டசபை தொகுதிகளில் 2-ம் இடத்தை பிடித்துள்ளோம். இது அ.தி.மு.க. தலைமைக்கும் தெரியும்' என்றார். ஜனவரி தை பொங்கலுக்குள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீடு விவரத்தை அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.