சென்னையில் 15 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்த தகவலையும் அமலாக்கத்துறையினர் வெளியிடவில்லை;
சென்னை,
முறைகேடான பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் அமலாக்கத்துறை, ஏற்கனவே பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று தங்க நகை மற்றும் இரும்பு தொழில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கே இந்த சோதனை வேட்டை தொடங்கியது. மாலையிலும் சோதனை நீடித்தது. மத்திய போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த சோதனை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. கீழ்ப்பாக்கம் பேராயர் எஸ்றா சற்குணம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிர்மல் குமார் என்பவர் வீட்டிலும், சைதாப்பேட்டை தெற்கு மாடவீதியில் வசிக்கும் கலைச்செல்வன் என்பவர் வீட்டிலும், கே.கே.நகர் லெட்சுமண சாமி சாலையில் வசிக்கும் நகை வியாபாரி மகாவீர் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இதேபோல் எம்.ஜி.ஆர். நகர், அண்ணா மெயின் ரோட்டில் வசிக்கும் மகாத்மா சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. சவுகார்பேட்டையில் கந்தப்ப முதலி தெருவில் வசிக்கும் சுனில் என்பவரது வீட்டிலும், வடபழனியில் ராகேஷ் என்பவர் வீட்டிலும் சோதனை வேட்டை நடந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. சென்னை அம்பத்தூர் திருவேங்கட நகரில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடைபெற்றது. தற்போது சோதனை முடிந்த நிலையில், அங்கிருந்து கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்த தகவலையும் அமலாக்கத் துறையினர் வெளியிடவில்லை