பில்லூர் அணை நிரம்பியது; நடப்பாண்டில் 2-வது முறையாக தண்ணீர் திறப்பு
பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அதன்படி நேற்று இரவு 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர்வரத்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 92.50 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக பில்லூர் அணை நடப்பாண்டில் 2-வது முறை நிரம்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து 14,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8,438 கன அடியாக உள்ளது.
இதனிடையே பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட வாய்ப்புள்ளதால் கரையோர பகுதி மக்கள் மிகவும் கவனமாக இருந்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து பில்லூர் அணை செயற்பொறியாளர் மேற்பார்வையில் அதிகாரிகள் அணையின் நீர்வரத்து, நீர்மட்டம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.