தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியம்; முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதில் அளிக்கிறார்
தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அவர் பேச இருப்பதால் விவாதத்தின் போது அனல் பறக்கும் என்று தெரிகிறது;
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17-ந் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டசபை கூட்டம் இல்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.
தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அவர் பேச இருப்பதால் விவாதத்தின் போது அனல் பறக்கும் என்று தெரிகிறது. அனைத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதில் அளிக்கிறார். நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியதும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகிறார்.
தொடர்ந்து தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். அதன்பின்னர் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட இருக்கிறது. மீண்டும் இந்த ஆண்டு கடைசியில் சட்டசபை கூட்டம் நடைபெறும். சுமார் ஒரு வார காலம் இந்தக் கூட்டம் நடக்கும்.