பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி-போரூர் இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.;

Update:2025-06-06 17:17 IST

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

இதில் பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் கடந்த மார்ச் 20-ந்தேதி முதற்கட்டமாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ந்து இதே வழித்தடத்தில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி நடைபெற்றது.

இந்நிலையில், பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கடந்த முறை அப் லைனில்(Up line) சோதனை ஓட்டம் நடந்த நிலையில், இந்த முறை டவுன் லைனில்(Down line) சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி-போரூர் இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்