தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.;
சேலம்,
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் விடுமுறை நாட்களில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஏற்காட்டில் சீதோஷ்ண நிலையை விரும்பி, அங்குள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பார்கள்.
தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர்.
ஏற்காட்டின் பிரதான சுற்றுலாத் தலங்களான ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் லேடிஸ் சீட் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ந்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள், குளித்து மகிழ்ந்தனர்.
மேலும், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
20 கொண்டை ஊசி வளைவுகளிலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. போலீசார் முக்கிய சந்திப்புகளில் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் ஹோம் ஸ்டேக்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி வழிவதால் ஏற்காடு நகரமே பரபரப்பாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், உள்ளூர் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தள்ளுவண்டி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை விடுமுறை இன்னும் சில நாட்கள் நீடிப்பதால், பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.