திடீரென கீழே விழுந்த ரெயில்வேகேட்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

ரெயில்வே கிராசிங்கில் கேட் திடீரென கீழே சரிந்து விழுந்ததால், அதில் வாகன ஓட்டிகள் சிக்கிக்கொண்டனர்.;

Update:2025-11-27 05:13 IST

கோவை,

கோவை-மேட்டுப்பாளையத்துக்கு பயணிகள் ரெயில் தினசரி 8 முறை வந்து செல்கிறது. இதற்காக நகரப்பகுதிகளில் ரெயில்வே தண்டவாளம் செல்லும் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் நெரிசலின்றி வாகன ஓட்டிகள் கடந்து செல்வதற்கு, பல்வேறு பகுதிகளில் ரெயில்வே பாலங்கள் உள்ளன.

ஆனால் ஒரு சில இடங்களில் ரெயில்வே கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் கோவை அருகே துடியலூர்- சரவணம்பட்டி சாலையில் அமைந்து உள்ள ரெயில்வே கிராசிங்கில் ரெயில் வந்தால் மூடப்படும். ரெயில் சென்றதும் கேட் திறக்கப்படும். இரும்பு கேட் என்பதால் அதிக எடை கொண்டது. இந்த கேட் மேலே தூக்கி கீழே இறக்குவதாகும்.

நேற்று முன்தினம் இரவு அந்த ரெயில்வே கிராசிங்கில் கேட் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் இரு சக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் அதனை கடந்து சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் கண் இமைக்கும் நேரத்தில், ரெயில்வே கிராசிங்கில் இருபுறமும் மேலே தூக்கிய நிலையில் இருந்த அந்த ரெயில்வே கேட்கள் திடீரென டமாரென தானாக கீழே சரிந்து விழுந்தன.

இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சிலர் கேட்டை தாண்டி விட்டனர். பல வாகன ஓட்டிகள், இரண்டு கேட்டுக்கும் இடையில் உள்ள தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டனர். எச்சரிக்கை மணி ஒலிக்காமல், எந்த அறிகுறியும் இல்லாமல் ரெயில்வேகேட் திடீரென கீழே விழுந்து உள்ளது. நல்லவேளையாக கேட்டை தாண்ட முயன்ற வாகன ஓட்டிகள் தப்பி ஓடியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சில இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தாலும், பெரும் சேதம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

மேலும் அந்த நேரத்தில் ரெயில் வந்து இருந்தால் வாகன ஓட்டிகள் நிலை பரிதாபகரமாக இருந்து இருக்கும் என்கின்றனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் உடனே அங்கு விரைந்து வந்து அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தவாகனங்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்