ராமநாதபுரம்: சிவன் கோவில்களில் அன்னாபிஷேக பூஜை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
அன்னாபிஷேக பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இன்று உச்சிகால வேளையில் கருவறையில் உள்ள மங்களநாதருக்கு அரிசி சாதத்தால் படையலிடப்பட்டு அதில் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மங்களநாதருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதே போல் ராமநாதபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திலும் சொக்கநாதருக்கு அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது.
புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலும் இன்று மாலை கருவறையில் உள்ள மூலவர், முதல் பிரகாரத்தில் உள்ள 1008 சகஸ்ரலிங்கம் 2-ம் பிரகாரத்தில் உள்ள சிவலிங்கம், ஆஞ்சநேயர் சன்னதியில் உள்ள ஆத்ம லிங்கம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் படையலிடப்பட்டு அபிஷேகம் செய்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் ரவீந்திரன், பேஷ்கார்கள் கமலநாதன், முனியசாமி, நாகராஜ், பஞ்சமூர்த்தி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதுபோல் திருவாடானை ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், நயினார் கோவில் நாகநாதர் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.