குடியரசு தின விழா: கவர்னரின் தேநீர் விருந்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு

மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக கவர்னர் வழி நடத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-20 10:58 IST

கோப்புப்படம்

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாட்டின் குடியரசு தின விழாவையொட்டி, வரவேற்பு விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழக்கமாக அழைப்பு அனுப்பி வருகிறார். கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதனை சட்டப் பேரவையில் கவர்னர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார். வழிவழியாக பேணப்பட்டு வரும் நல் மரபுகளை உடைத்து களங்கப்படுத்துகிறார்.

சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து, இறுதியில் அவை காலவதியாகி விட்டதாக தன்னிச்சையாக அறிவிக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாகவும், ஒரு முகமாகவும் எதிர்த்து வருகிற புதிய தேசியக் கல்விக் கொள்கையை, கவர்னர் மாளிகை வழியாக, பல்கலைக் கழக துணை வேந்தர்களை நிர்ப்பந்தித்து வருகிறார். அறிவுசார் கருத்துக்களை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார்.

உலக புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கியானப்படுத்தி, அவமதித்து வருகிறார். கவர்னர் என்ற உயர்ந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமற்றவரான ஆர்.என்.ரவியின் அழைப்பையும், அவரது தேநீர் விருந்து விழாவையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்