தமிழ்நாட்டுக்கான நீர் பங்கீட்டில் ஒருபோதும் சமரசம் கிடையாது - கவர்னர் உரையில் தகவல்

சட்டசபை மரபுகளே எப்போதும் தொடரும் என்று சபாநாயகர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-20 11:33 IST

சென்னை,

கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6,871 புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், 5,216 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, 3,673 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபடுவதையும் கார்பன் தடங்களையும் குறைத்திடும் முன்முயற்சியாக, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக 380 மின் பேருந்துகள் ரூ.288 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

தொழில் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.12.16 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மாநிலமெங்கும் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இதுவரை 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை சுமார் 36 லட்சம். 2025-ம் ஆண்டில் மட்டும் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணுவியல் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவிலான மின்னணுவியல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.2 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர்ந்து வரும் மின்தேவையை நிறைவு செய்திடும் நோக்கில் உடன்குடி மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையங்களில் 2,640 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அலகுகள் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. மேலும், 520 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புனல் மின் நிலையங்கள், மின்கலன் சேமிப்பு அமைப்புகள் மற்றும் நீரேற்று மின் திட்டங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம், உடன்குடி அனல்மின் திட்டம் நிலை 2 மற்றும் 3 மற்றும் தூத்துக்குடி அனல்மின் திட்டம் விரிவாக்கம் ஆகியவையும் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றின் மூலம் வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் 7 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக உயரும். இது மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்குப் பேருதவியாக அமையப்பெறும்.

திமுக அரசு பொறுப்பேற்றதன் பின், மேட்டூர் அணையினை பாசன வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதோடு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.459 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கடைமடை வரை நீர் சேர்ந்து வேளாண் உற்பத்தியினை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வினை செம்மைப்படுத்தியுள்ளது.

நீர் மேலாண்மையில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 121 தடுப்பணைகள் மற்றும் 101 அணைக்கட்டுகள் ஆகியவை சுமார் ரூ.2,086 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் இதுவரை 1,045 நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

இதுமட்டுமல்லாது, பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டத்தின் பணிகள் முடிக்கப்பட்டு தாமிரபரணியில் இருந்து மொத்தமாக 9.38 டி.எம்.சி. நீரானது திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள பல கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், கூடுதலாக 56,933 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் நீரில் தனது நியாயமான பங்கினைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. நமக்கே உரிய நியாயமான நீர்ப் பங்கீட்டில் நாம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டசபை மரபுகளே எப்போதும் தொடரும். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினார். அதற்கு என்னுடைய பதிலும் வழங்கப்பட்டுள்ளது. அவை முன்னவர் துரைமுருகனாலும் விளக்கப்பட்டது. கவர்னரின் உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏறும். மற்ற எந்த நிகழ்வுகளும் அவைக் குறிப்பில் ஏறாது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்