திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தவறான புள்ளி விவரங்களை படிக்க மாட்டேன் என கவர்னர் கூறியதில் தவறில்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.;
சென்னை,
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்காத நாட்களே இல்லை எனும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாடு, போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருப்பதால் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளது. ஆனால், நாட்டிலேயே சூப்பர் முதல்வர் என தன்னைத்தானே மு.க.ஸ்டாலின் நினைத்துக்கொள்கிறார்.
கவர்னரின் உரையில் முதலமைச்சரின் கருத்துகளும் உள்ளன. கவர்னர் உரையில் திமுக அரசு தவறான கருத்தை திணிக்கப் பார்க்கின்றனர். தவறான புள்ளி விவரங்களை படிக்க மாட்டேன் என கவர்னர் கூறியதில் தவறு இல்லை. கவர்னர் மீது வேண்டுமென்றே தவறான எண்ணத்தை திமுக அரசு உருவாக்குகிறது.
கவர்னர் உரையின்போது மரபை மீறி முதல்-அமைச்சர் உரையாற்றியது தவறு. தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை கவர்னர் சுட்டிக்காட்டி உள்ளார். தேசிய கீதம் தொடர்பாக கவர்னர் கூறியதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.