மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்
டெத் கிளைம் பாலிசி வழங்காமல் காலதாமதம் செய்ததாக முகவர்கள் கல்யாணியிடம் புகார் அளித்துள்ளனர்.;
மதுரை,
மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், நெல்லையைச் சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (வயது 55) உடல் கருகி பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டது. அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளியானது. தீ விபத்தில் கல்யாணி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளரே பெட்ரோல் ஊற்றி அவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
டெத் கிளைம் பாலிசி வழங்காமல் காலதாமதம் செய்ததாக முகவர்கள் கல்யாணியிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளிப்பேன் என கல்யாணி தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உதவி மேலாளர் இந்தப் படுபாதகச் செயலை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து உதவி மேலாளர் ராம் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.