ரெயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுத்தால் ரூ.1,000 அபராதம் - அதிகாரிகள் எச்சரிக்கை
ரெயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்' எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.;
கோப்புப்படம்
சென்னை,
செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களும் ரீல்ஸ்களுக்கான இடங்களாக மாறி இருக்கிறது.
குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
விதிகளின்படி ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுப்பது அனுமதிக்கப்படுவதில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால், சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது. எனவே, ரெயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள். அவ்வாறு ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும். இதை தீவிரமாக கடைபிடிக்க ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்க தண்டவாளப் பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.