டிட்வா புயலால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு
டிட்வா புயலால் தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை ‘தித்வா' புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த இயற்கை பேரிடர் பாதிப்புகளை, ஆய்வு செய்து அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை அளித்தனர்.
அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை ‘தித்வா' புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 55 ஆயிரத்து 681 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்தால் 83 ஆயிரத்து 526 விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிவாரண விதிமுறைகளின்படி, 33 சதவீதத்திற்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்தால் பருவமழை சார்ந்த பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.8 ஆயிரத்து 500-ம், பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் ‘தித்வா' புயல் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான நிவாரணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 33 சதவீதத்திற்கும் மேல் பயிர் சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும், பாசன வகையைப் பொருட்படுத்தாமல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும். குறிப்பாக, நெல் பயிருக்கு பாசனம் உள்ளதா? இல்லையா? என்பதை கருத்தில் கொள்ளாமல் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த நிவாரண திட்டத்தின் கீழ், மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.94 கோடியே 28 லட்சத்து 62 ஆயிரத்து 889-ம், மாநில நிதியில் இருந்து ரூ.16 கோடியே 57 லட்சத்து 28 ஆயிரத்து 539-ம் என மொத்தம் நிவாரணத்திற்காக ரூ.110 கோடியே 85 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மாவட்ட வாரியாக பயிர் சேதம் ஏற்பட்ட பரப்பளவு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.