தஞ்சை பெரிய கோவிலில் மழைநீர் தேங்காத வகையில் தரைதளம் அமைப்பு

தட்டையான செங்கல் கற்கள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-15 10:51 IST

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோவிலில் உள்ள கல்வெட்டுகளும், சிற்பங்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர். இந்த கோவில் இந்திய அரசின் தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கோவிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், பாசி படர்ந்துள்ளதால் பல இடங்களில் வழுக்கி விழுந்து மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும், 35 ஆண்டுகளுக்கு முன் பிரகாரத்தில் பதிக்கப்பட்ட தட்டையான செங்கற்கள் தேய்ந்து, மேடு பள்ளமாக இருப்பதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

இதையடுத்து இந்திய தொல்லியல் துறையினர் கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக செங்கல் கற்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மீண்டும் தட்டையான செங்கல் கற்களை பதித்து, மழைநீர் தேங்காத வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 2023-2024-ம் ஆண்டில் முதற்கட்டமாக கோவிலின் தென்புற பகுதியில் பழைய செங்கல் கற்கள் அகற்றப்பட்டு, புதிய கற்கள் பதிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து தற்போது கோவிலின் பின்புறம் கருவூரார் சன்னதிக்கும், விநாயகர் சன்னதிக்கும் இடையே சுமார் 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்ள பழைய கற்கள் அகற்றும் பணி தொடங்கியது. இந்த பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கற்கள் அகற்றப்பட்டவுடன், புதிய தட்டையான செங்கல் கற்கள் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை பெரியகோவிலில் உள் பிரகாரத்தில் தட்டையான செங்கல் கற்கள் கொண்டு தரைதளம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த கற்கள் தேய்ந்து மேடு பள்ளமாக இருப்பதால் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. இதனால் பாசி படர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து தொல்லியல் துறையினர் பிரகாரத்தில் உள்ள கற்களை அகற்றிவிட்டு, அதற்கு பதில் தட்டையான செங்கல் கற்களை கொண்டு தரைதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்காக பிரத்யோகமான தட்டையான செங்கல் கற்கள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டமாக பெரியகோவில் பின்புறம் பழைய கற்கள் அகற்றப்படுகிறது. இதற்காக கோவில், கோபுரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், அதிர்வு ஏற்படாத வகையிலும் உளி, சுத்தியல் கொண்டு தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 4 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். பின்னர் நந்தி மண்டபம் அருகே பணிகள் நடைபெறவுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்