சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.17.5 லட்சம் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைப்பு
சாலையில் கிடந்த பணத்தை பத்திரமாக போலீசில் ஒப்படைத்த செல்வமாலினியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.;
மதுரை,
மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தளவாய் தெரு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மூடை கிடந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த செல்வமாலினி (வயது 46) என்பவர் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த பண மூடையை எடுத்து விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அதில் பார்த்தபோது ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. சாலையில் கிடந்த பணத்தை பத்திரமாக போலீசில் ஒப்படைத்த செல்வமாலினியை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
மேலும் இந்த பணத்தை யார் விட்டு சென்றார்கள் என்பது தொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, அந்த பணத்தை வருமானவரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த பணம், கேரளாவை சேர்ந்த பேட்டரி வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது எனவும், அவர் மதுரைக்கு வந்து சென்றபோது பணத்தை தவறவிட்டதாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து பணத்திற்கான ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த வியாபாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.