தமிழகத்தில் சமூக ஆர்வலர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது - டிடிவி தினகரன்

கனிமவளக் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-08-27 13:12 IST

கோப்புப்படம் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையத்தில் கனிம வளக்கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தேனி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளை குறித்து பலமுறை தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியமே சசிக்குமாரின் படுகொலைக்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது.

மணல் கடத்தல் மற்றும் கனிமவளக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு புகார் அளிப்பவர்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையோ, திமுக அரசின் முழுநேர ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தலையும், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படும் கனிமவளங்களையும் தடுத்து நிறுத்தவோ, அது குறித்து புகார் அளித்தாலோ அதற்கான சன்மானம் மரணம்தான் என்பதையே அடுத்தடுத்து நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, இயற்கை ஆர்வலர் சசிக்குமாரின் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்