சப்பாத்தி சாப்பிட்ட பள்ளி மாணவி மூச்சுத்திணறி உயிரிழப்பு
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.;
கோப்புப்படம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கரடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தவமணி மகள் பூவரசி (14 வயது). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூவரசி வீட்டில் சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு குருமா சாப்பிட்டு விட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது இரவு 11 மணியளவில் மாணவிக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டதை அடுத்து படுக்கையில் இருந்து எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் தூங்கினார்.
பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் பூவரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மாணவியை பெற்றோர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சப்பாத்தி சாப்பிட்டதால் மாணவி மூச்சுத்திணறி இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.