துபாய் ஏர் ஷோ: விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
'விங் கமாண்டர்' நமன்ஷ் சியாலின் துணிச்சல் அழியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமானம் நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் விமான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் விமானங்கள் வழக்கம்போல் சாகசத்தில் ஈடுபட்டிருந்தன. அப்போது இந்தியாவின் தேஜஸ் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது, திடீரென நிலைதடுமாறி தரையில் விழுந்து தீப்பிடித்தது.
இந்த விபத்தில் இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி நமன்ஷ் சியால் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தார். நமன்ஷ் சியால் கோவை சூலூரில் உள்ள விமான சாகச படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரது உடல் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
அங்கு கோவை மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் துபாய் ஏர் ஷோ நிகழ்ச்சியில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த ‘விங் கமாண்டர்' நமன்ஷ் சியாலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
‘விங் கமாண்டர்' நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம்! அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது துணிச்சல் அழியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.