தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமியை தேடும் பணி தீவிரம்
வனத்துறையினர் 2-வது நாளாக சிறுமியை தேடி வருகின்றனர்.;
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் வடமாநில பெண் தொழிலாளி, தனது வீட்டின் பின்புறம் தனது 6 வயது மகளுடன் நேற்று தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, தண்ணீர் குடத்தை வீட்டிற்குள் வைத்துவிட்டு வருவதற்குள், வெளியே நின்றுகொண்டிருந்த சிறுமியை சிறுத்த தாக்கி இழுத்துச்சென்றது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினரும் சிறுமியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதுவரை நடந்த தேடுதலில், சிறுமியின் உடை மட்டுமே கிடைத்த நிலையில், குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 2-வது நாளாக இன்று ட்ரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.