நேபாள கலவரத்தில் சிக்கிய பொதுமக்களின் உயிரை காத்த செந்தில் தொண்டைமான் - ஓபிஎஸ், டிடிவி தினகரன் பாராட்டு

பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செந்தில் தொண்டைமானின் பணி அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.;

Update:2025-09-17 10:30 IST

நேபாளத்தில் நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டைமான் சென்றிருந்தார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற கலவரத்தில் அவர் தங்கியிருந்த விடுதி தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்களை தன் உயிரைப் பணயம் வைத்து அவர் காப்பாற்றியுள்ளார்.

செந்தில் தொண்டைமானுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு அவருக்கு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சமீபத்தில் அண்டை நாடான நேபாளத்தில் அந்த நாட்டு அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் வெகுண்டெழுந்து நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைக் கலவரத்தில், நேபாளத்தில் நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் செந்தில் தொண்டைமான் தான் தங்கியிருந்த விடுதி தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தன் உயிரை துச்சமென மதித்து அங்கு தங்கியிருந்த பல சுற்றுலாப் பயணியரை காப்பாற்றியுள்ளார் என்ற மனித நேயச் செய்தியை அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன்.

‘பிறர் நலமே தன் நலம்’ என்பதன் அடிப்படையில், தம்மால் முடிந்த வரை போராடி சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றிய செந்தில் தொண்டைமானின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செந்தில் தொண்டைமானின் பணி அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "நேபாள கலவரத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பாதுகாத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமானின் மனிதநேயமிக்க செயல்பாடு மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

நேபாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கலவரமாக உருவெடுத்த நிலையில், தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்களை தன் உயிரைப் பணயம் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் காப்பாற்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

வன்முறை வெறியாட்டத்தால் ராணுவக் கட்டுப்பாட்டையும் இழந்த நேபாளத்தில் வசிக்கும் மக்களும் நம்மில் ஒருவரே என்ற எண்ணத்தில் பொதுநலத்துடன் செயல்பட்ட செந்தில் தொண்டைமானுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்