ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை - டிரைவர் போக்சோவில் கைது
ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள குறிப்பன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (35 வயது). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் அதே பகுதியில் செயல்பட்டுவரும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்து வருவதும், மீண்டும் வீட்டிற்கு திரும்ப கொண்டு விடும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இவரது ஆட்டோவில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது மாணவியும் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி மட்டும் அருள்ராஜின் ஆட்டோவில் தனியாக ஏறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மாணவிக்கு அருள்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி மறுநாள் தனது பள்ளி ஆசிரியர்களிடம் செய்கையாக செய்து காண்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் உடனடியாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் அருள்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.