உங்க கனவ சொல்லுங்க - சமூக ஊடக விழிப்புணர்வு போட்டிகள்

தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.;

Update:2026-01-24 16:05 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின், “எல்லோருக்கும் எல்லாம்” என்ற உயரிய நோக்குடன் பொதுமக்கள் தங்களது எண்ணங்கள், கருத்துகள் மற்றும் கனவுகளை அரசுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற முன்னெடுப்பை 09.01.2026 அன்று தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாடு அரசு மக்களின் நலனை மையமாகக் கொண்டு தொடர்ந்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் பயன்பாடு, அதன் தாக்கம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த முயற்சியை பொதுமக்கள் மத்தியில் விரிவாக பரவச் செய்வதற்காக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற தலைப்பில் ஊடக விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. இதன் வாயிலாக இளைஞர்களும் பொதுமக்களும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

மக்கள் தேவைகளை உணர்ந்து செயல்படும் தமிழ்நாடு அரசு, மக்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற முன்னெடுப்பை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களை, தன்னார்வக் குழுக்கள் நேரில் சென்று சந்தித்து, அவர்களின் கருத்துகள் மற்றும் 2030 ஆம் ஆண்டை நோக்கிய கனவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான களப்பணிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது, இதற்காக பயிற்சி பெற்ற சுமார் 50,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மக்களுக்கு ‘கனவு அட்டை’ வழங்கப்படும்; அதன் வாயிலாக www.uks.tn.gov.in இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளின் நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த முயற்சியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில்,

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சமூக ஊடக விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது.

போட்டிகளும் அதன் விதிமுறைகளூம் பின்வருமாறு:

இந்த போட்டிகள் இரண்டு வகையான பங்கேற்பு முறைகளில் நடத்தப்படும்.

1.பொதுமக்கள்

2. உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators)

1. பொதுமக்கள் எவ்வாறு பங்கேற்கலாம்?

பொதுமக்கள், இணைப்பு-I-ல் (Annexure–I) குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, 30 முதல் 60 விநாடிகள் வரையிலான வீடியோவை உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.

வீடியோவிற்கான விதிமுறைகள்:

வடிவம்:

1. வீடியோக்கள் தெளிவான ஒரு கருப்பொருளை (Concept-based) அல்லது கதை வடிவிலான (Story-based) உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டம் மற்றும் 'உங்க கனவ சொல்லுங்க' முன்னெடுப்பின் மையக்கருத்து சிதையாமல், அதனுடன் வீடியோ தெளிவாக ஒத்துப்போக வேண்டும்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

வீடியோக்களை கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வழியில் சமர்ப்பிக்கலாம்:

1. நேரடிப் பதிவேற்றம்: கூகுள் படிவத்தில் (Google Form) வீடியோ கோப்பை நேரடியாகப் பதிவேற்றம் செய்யலாம்.

2. கூகுள் டிரைவ் லிங்க்: வீடியோவை உங்கள் கூகுள் டிரைவில் பதிவேற்றி, அதன் இணைப்பை (Link) அனுப்பலாம். (குறிப்பு: லிங்க் அனைவருக்கும் அணுகும் வகையில் 'Open Access' அனுமதியுடன் இருப்பதை உறுதி செய்யவும்).

வயது வரம்பு மற்றும் மதிப்பீட்டு முறைகள் :

பங்கேற்பாளர்கள் பின்வரும் வயது வரம்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவார்கள்

குழந்தைகள்: 10 வயதிற்கு உட்பட்டவர்கள்

பள்ளி மாணவர்கள்: 11 – 14 வயது மற்றும் 15 – 17 வயது

இளைஞர்கள்: 18 – 25 வயது

பெரியவர்கள்: 26 – 40 வயது மற்றும் 41 – 60 வயது

முதியவர்கள்: 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

மதிப்பீட்டு விதிமுறைகள்:

1. ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவர்கள் சார்ந்த வயதுப் பிரிவினருடன் மட்டுமே ஒப்பிடப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

2. படைப்புகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் காலக்கெடுவை (Deadline) முறையாகப் பின்பற்றி இருக்க வேண்டும்.

3. வீடியோவின் மையக்கருத்து, கதையின் தரம் மற்றும் சொல்லப்படும் செய்தியின் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.

4. தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை (Certificates of Recognition & Medals) வழங்கிச் சிறப்பிப்பார்.

2. உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators)

உள்ளடக்க உருவாக்குநர்கள், “உங்க கனவ சொல்லுங்க” முன்னெடுப்பின் நோக்கத்தை விளக்கும் வகையில் பிரத்யேக வீடியோக்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். இந்த திட்டம் குறித்த விரிவான விளக்கம் இணைப்பு-2-ல் (Annexure–2) வழங்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யும் முறை:

வீடியோக்களைக் கீழ்க்கண்ட வழிகளில் சமர்ப்பிக்கலாம்:

கூகுள் படிவம்: வீடியோ கோப்பினை நேரடியாகப் பதிவேற்றலாம்.

கூகுள் டிரைவ்: 'Open Access' அனுமதியுடன் கூடிய டிரைவ் லிங்க் மூலம் சமர்ப்பிக்கலாம்.

தேர்வு மற்றும் வெளியிடும் நடைமுறை:

1. மாவட்டத்திற்கு 10 உள்ளடக்க உருவாக்குநர்கள் வீதம், தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவிக்கப்படும்.

2. தேர்வு செய்யப்பட்டவர்கள், ஊடக மையத்தின் வழிகாட்டுதலின்படி அந்த வீடியோவைத் தங்களது சமூக ஊடகக் கணக்குகளில் (Instagram, Facebook, YouTube) பதிவிட வேண்டும்.

3. வீடியோவைப் பதிவிட்ட பிறகு, அதன் நேரடி இணைப்பை (Live Post Link) ஊடக மையம் வழங்கும் தனி கூகுள் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மதிப்பீட்டு விதிமுறைகள்:

1. வீடியோ பதிவிடப்பட்ட பிறகு அதன் சென்றடைவு (Reach), ஈடுபாடு (Engagement) மற்றும் தாக்கம் (Impact) ஆகியவை ஆய்வு செய்யப்படும்.

2. இப்போட்டிக்காகத் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட புதிய (Original) உள்ளடக்கங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3. வீடியோக்கள் கட்டாயமாக ‘உங்க கனவ சொல்லுங்க’ முன்னெடுப்பையும், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தையும் முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும்.

4. சிறப்பாகச் செயல்படும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு “TNDIPR Media Hub – உங்க கனவ சொல்லுங்க தன்னார்வலர்கள்” என்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கீழ்கண்ட விரைவு துலங்கல் குறியிட்டில்(QR Code) Google Form- https://forms.gle/R1dmxn3r87qq1ZX88 உள்ளது. அதில் படைப்பு மற்றும் இதர விவரங்களை 09.02.2026க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும்-9498042408 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் ஹாய்(Hi) என்று அனுப்பினால் Google Form லிங்க் வரும் அதிலும் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்