மது பிரியர்களுக்கு ஷாக்; மதுபானங்கள் விலை உயர்கிறது?
ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் மதுபாட்டில்களுக்கான லேபிள், பாட்டில் மூடி பேக்கிங் அட்டை பெட்டி போன்றவற்றுக்கான ஜி.எஸ்.டி.வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் மதுவகைகளின் சி விலையை உயர்த்தலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டில் 4829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை மதுபானங்களும், 35 வகை யான பீர் மற்றும் ஒயின் வகைகளும் விற்பனைசெய்யப்படுகின்றன.
இது தவிர 'எலைட்' டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்களும் விற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுபாட்டில்களின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆப் பாட்டிலுக்கு ரூ.20, முழு பாட்டிலுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டது. இதில் அந்தந்த ரகங்களை பொறுத்து ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டது.மதுபானங்களுக்கு மாநில அரசு வாட் வரி விதித்து வரும் நிலையில் மத்திய அரசு அண்மையில் ஜி.எஸ்.டி. வரி சீர்த்திருத்தங்களை செய்ததில் மதுபாட்டில்களுக்கான மூடிகள், லேபிள்கள் போன்ற பேக்கேஜிங் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது.
இது மட்டுமின்றி போக்குவரத்து சேவைகளுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மதுபான உற்பத்தியாளர்களுக்கு அடக்கவிலை அதிகரித்துள்ளது. இதனால் மது பாட்டில்கள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மது வகைகளின் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. உயர் இதுபற்றி அரசு அதிகாரியிடம் கேட்டதற்கு ஜிஎஸ்டியை வைத்து மது வகைகளின் விலையை உயர்த்துவது கிடையாது. கலால் வரி போன்றவையின் அடிப்படையில் தான் உயர்த்தப்படும். ஆனாலும் மது வகைகள் விலையை உயர்த்துவதா? என்பது வேண்டாமா? அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இப்போது அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எந்த அறிவிப்பாக இருந்தாலும், அரசுதான் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.