'எளிமை ஆளுமை' திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைப்பு
தமிழ்நாடு அரசின் சேவைகள் எளிதாக சென்றடைய புதிய திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (29.05.2025) வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில்
(1) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 36.24 கோடி ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் 102 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் 19 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 60 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 2 முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பேரூராட்சிகள் சார்பில் 77.07 கோடி ரூபாய் செலவில் 14 முடிவுற்றப் பணிகள் ஆகியவற்றை திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 565.63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 147 புதிய திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 91 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய குடிநீர் திட்டப் பணிகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் 27.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகள், பேரூராட்சிகள் சார்பில் 12.18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகள் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 19.44 கோடி ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
கலைஞர் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல்
(2) பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
(3) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் 424 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – ராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு சாலை, மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் ரெயில்வே கடவிற்கு மாற்றாக 68 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், மேல்பாக்கத்தில் 6 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
(4) வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் "உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு அரசின் சேவைகள் எளிதாக சென்றடைய புதிய திட்டம்
(5) மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாகச் சீர்திருத்த முன்னெடுப்பின் மூலமாக "எளிமை ஆளுமை" திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதாரச் சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து மதிப்புச் சான்றிதழ், வெள்ளை வகைத் தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்குப் பயன்படுத்த தடையின்மைச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் ஆகிய பத்து சேவைகளின் நடைமுறைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக இணையவழிச் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.