அம்பை, கல்லிடை கோவில்களில் சூரசம்கார திருவிழா
சூரசம்ஹார நிகழ்வில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 22ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி குமார கோவில் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கந்தசஷ்டி விழா தொடங்கியது முதல் ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து வந்தனர்.
சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், தலச்சேரி மானேந்தியப்பர் கோவிலிலும் நடைபெற்றது.
இதுபோன்று கந்த சஷ்டியை முன்னிட்டு அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலில் இன்று காலை 10 மணிக்கு கும்ப பூஜை மற்றும் ஹோமத்துடன் தொடங்கி சுப்பிரமணியருக்கு பால், தயிர், விபூதி, இளநீர் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பின்னர் மாலையில் வடக்கு ரதவீதியில் சூரசம்காரத் திருவிழாவும் நடைபெற்றது.
மேலும் அம்பை மயிலேறி முருகன் கோவிலிலும், அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலிலும், சுப்ரமணியபுரம் கதிர்வேல் திருமுருகன் கோயிலிலும், வாகைகுளம் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், மன்னார்கோவில் பால சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சூரசம்காரத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சஷ்டி விரதம் இருந்த முருக பக்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று பக்தி கோஷம் முழங்க முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.