ரூ.20.19 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இறைச்சிக்கூட கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

அதிநவீன வசதிகளுடன் கூடிய இறைச்சிக் கூடம் கட்டும் பணியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.;

Update:2026-01-08 19:05 IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடையாறு மண்டலம், சைதாபேட்டை ஆலந்தூர் சாலை ஆடுதொட்டியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.20.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நவீன இறைச்சிக் கூடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டையில் பெயர் பெற்ற ஆடுதொட்டி என்னுமிடத்தில் ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன இறைச்சிக் கூடம் கட்டும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆட்டு இறைச்சி கூடம் 1960-ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு ரூ.9 கோடி செலவில் மிகப்பெரிய அளவில் நவீனப்படுத்தப்பட்ட ISO தரச்சான்றிதழ்களுடன் கூடிய ஆட்டிறைச்சி கூடமாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து தற்போது பெருகிவரும் மக்கள் தொகை, அதேபோல் வியாபாரம் கூடுதல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்த அதிநவீன இறைச்சிக் கூடத்தில் பல்வேறு புதிய தொழில் நுட்பத்துடன் சுத்தமான பரிசோதிக்கப்பட்ட இறைச்சி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சரின் சிங்கார சென்னை 2.0 எனும் திட்டத்தின்கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த அதிநவீன இறைச்சி கூடத்தில் ஒரே சமயத்தில் 700 ஆடுகள் இறைச்சிக்காக தயாராகும் வகையில் 105 கொக்கிகளுடன் 8,600 சதுர அடியில் ஒரு கூடம் அமைகிறது.

ஆட்டு இறைச்சிகளை ஜட்கா மற்றும் ஹலால் முறையில் தயார் செய்யும் வகையில் இக்கூடத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று இறைச்சியை குளிரூட்டி பதப்படுத்தும் முறையும், Cold Storage என்கின்ற வகையில் பதப்படுத்தி வைப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 Retail Shop என்னும் சிறுவணிக கடைகளும் கட்டப்பட உள்ளது. இறைச்சிகளை விநியோகம் செய்வதற்கும் அறைகள் கட்டப்பட உள்ளது.

இந்த அரசு தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை நடைமுறைப்படுத்துவதில் தனி கவனம் செலுத்துகிறது. அந்த வகையில் இங்கே வெளியேறும் அசுத்த நீர் 7 KLD Effluent Treatment Plant அமைக்கப்பட்டு அதில் சுத்திகரிக்கப்பட உள்ளது. மேலும் 7,000 லிட்டர் கொள்ளளவு உள்ள உயர்மட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. இங்கே கிடைக்கப்பெறும் தோல்கள் மற்றும் இதர பயன்பாடு உள்ள உறுப்புகள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன இறைச்சி கூடத்தில் கால்நடை ஆய்வகம் ஒன்றும், கால்நடை மருத்துவர்களுக்கு ஒரு அறையும் கட்டப்பட உள்ளது.

ஏற்கெனவே இங்கு இயங்கி வந்த இறைச்சி கூடமானது மிகவும் குறுகிய இடத்தில் செயல்பட்டு வந்தது. முதல்-அமைச்சரின் ஆலோசனைகளைப் பெற்று தற்சமயம் இந்த இறைச்சி கூடமானது நவீனமும், சுகாதாரத்தோடும், நிலையான நீடித்த சுற்றுச்சூழல் அமைப்பும் ஒருங்கே பெற்று இறைச்சி தயாரிக்கும் முறை மிகவும் நேர்த்தியாகவும், பொது சுகாதாரம் பாதிக்காத வகையில் புதிய விதிமுறைகளை கடைபிடித்து ஒரு சிறந்த இறைச்சி கூடமாக அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்