49-வது சென்னை புத்தகக் காட்சி: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இன்று முதல் 21-ந்தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.;
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் 49-வது புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த புத்தகக் காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் புத்தக அரங்குக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இன்று முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ள புத்தகக் காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் புத்தகக் காட்சி மைதானம் முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை இலவச மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன. வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும். இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children's Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.