பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானது.;
சென்னை,
பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல் துறையினர் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளனர். சில பெண் ஆசிரியர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்று தருவதற்காக 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 16,500-க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்களில் இப்போது சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு காலத்திற்கு பிறகும் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானது.
ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும் திமுக, பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய போவதாக எச்சரித்திருக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு மோசடியான ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து, அதையும் செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.
ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கும் திமிரில் திமுக ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன் மூலம் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் சக்தியை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முடியாது. அதிகார திமிரில் அடக்குமுறைகளை ஏவுபவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி எனும் தண்டனையை வழங்கவிருப்பது உறுதி.