40 வயது டாக்டருடன் காதல்.. அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி.. போலீஸ் விசாரணை

மாணவியின் தந்தை வரதராஜன் நேற்று முன்தினம் மாணவி தங்கியிருந்த அறைக்கு வந்து விட்டு சென்றது தெரிய வந்தது.;

Update:2026-01-08 18:43 IST

சேலம்,

சேலம் அருகே ஒரு தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகே உள்ள நாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான அடுக்கு மாடி வீட்டில் 3-ம் மாடியில் தோழியுடன் தங்கியிருந்தார்.

அவரது அறையில் இருந்த தோழி அட்சயா ஊருக்கு சென்று விட்டு நேற்று மீண்டும் அறைக்கு திரும்பினார். அப்போது அறையின் கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை திறந்து விட்டு உள்ளே சென்றார்.அப்போது மல்லாந்த நிலையில் படுக்கையிலேயே வர்ஷினி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சம்பவம் குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சேலம் மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார் கிரி, இரும்பாலை இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் தந்தை வரதராஜன் நேற்று முன்தினம் மாணவி தங்கியிருந்த அறைக்கு வந்து விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனுக்கு அழைத்து போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யயப்பட்டிருந்தது.அவர் நெல்லையில் உள்ள வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அவர் எங்கு சென்றார் என்பதும் மர்மாக உள்ளது.இதற்கிடையே நேற்று மாலை மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் சேலத்திற்கு வந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மாணவி உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், வர்ஷினி நெல்லையை சேர்ந்த 40 வயது சித்தா மருத்துவரான 2 குழந்தைகளின் தந்தையை காதலித்து வந்ததும் இதனை அறிந்த அவரது தந்தை வரதராஜன் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் புத்தாண்டையொட்டி வர்ஷினி ஊருக்கு சென்ற நிலையில் அப்போதும் பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. மீண்டும் சேலத்திற்கு மாணவி வந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறைக்கு அவரது தந்தை விட்டு வெளியில் சென்ற நிலையில் மாணவி இறந்து கிடந்துள்ளார்.

ஆனால் மாணவி உடலில் எந்த விதமான காயங்களும் இல்லை. கை மட்டும் நீல நிறமாக காட்சி அளித்தது. ஆனால் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் மாணவியின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மாணவியின் காதலை ஏற்றுக்கொள்ளாத அவரது தந்தை மகளை கொலை செய்ததை உறுதி செய்த போலீசார் விஷம் கொடுத்து கொன்று விட்டு அங்கிருந்து சென்றாரா?

அல்லது தலையணையால் அமுக்கி மகளை கொலை செய்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.வரதராஜன் எங்கு சென்றார் என்ற விவரம் தற்போது வரை தெரிய வில்லை. அதனால் அவரது கதி என்ன ? என்பதும் மர்மமாக உள்ளது. மேலும் வரதராஜன் மகளை கவுரவ கொலை செய்தாரா? என்ற சந்தேக மும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

இது தவிர வேறு யாராவது வர்ஷினி தங்கியிருந்த அறைக்கு வந்தார்களா ? என்பது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி. டி.வி. காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். தடயவியல் நிபுணர்களும் வர்ஷனி அறையில் ஆய்வு செய்தனர்.

மேலும் மாணவியின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்திய போது எனது கணவர் எனக்கு போன் செய்து மகளை தாக்கியதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று வர்ஷினியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடக்கிறது. பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரி வித்துள்ளனர். இதனால் அவரது உறவினர்கள் கண்ணீர் விட்ட படி காத்து உள்ளனர். மேலும் மாணவியின் தந்தையை தேடி தனிப்படை போலீசாரும் நெல்லை விரைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்