பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை

தினத்தந்தி நாளிதழில் கடந்த 18-ந்தேதி இது குறித்த செய்தி வெளியானது.;

Update:2025-04-25 16:13 IST

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சுற்றுவட்டாரம் மற்றும் தமிழக-கேரள எல்லை பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் வருகின்றனர். அதன்படி தற்போது பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 462 உள்நோயாளிகளும், தினமும் 1,500 வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் திடீர் மின்தடையின் காரணமாக வயர்களில் தீப்பிடிப்பது போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது.

அத்துடன் சி.டி.ஸ்கேன், எக்ஸ்-ரே போன்ற உபகரணங்களும் பழுதாகி விடுகிறது. இதன் காரணமாக உரிய சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதனால் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு முடிவு செய்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி ரூ.2.9 கோடி செலவில் புதிதாக ஜெனரேட்டர், உயர் அழுத்த மின்பாதை, மின்மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

ஆனால் கூடுதல் நிதி தேவைப்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டன. இதையடுத்து கூடுதல் நிதியாக ரூ.33½ லட்சம் ஒதுக்கீடு செய்து 2 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக உயர் அழுத்த மின்பாதை, மின்மாற்றி அமைக்கும் இடம் புதர் மண்டி காணப்பட்டது.

இதனால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் கடந்த 18-ந்தேதி படத்துடன் செய்தி வெளியானது. இந்தநிலையில் இதன் எதிரொலியாக அதிகாரிகளின் உத்தரவின்பேரில் புதர்களை அகற்றி உயர் அழுத்த மின்பாதை, மின்மாற்றி அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க கூடுதலாக நிதி ஒதுக்கியும் உயர் அழுத்த மின்பாதை, மின்மாற்றி அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு தாமதமாகி வந்தது. இதையடுத்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், நன்றி தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்