பங்குச்சந்தை முதலீடு; மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்

இருமடங்கு லாபம் கிடைக்கும் என தொழிலதிபரிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.;

Update:2025-09-21 14:24 IST

மதுரை,

மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவரிடம், மதுரை சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், வில்லாபுரத்தை சேர்ந்த சரவணகுமார் ஆகியோர் அறிமுகமாகினர். அவர்கள் இருவரும் பங்குதாரர்களாக இருந்து, ஒரு பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்தநிலையில், வெளிநாட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என அவர்கள் இருவரும் சிவக்குமாரிடம் கூறி உள்ளனர். இதனை நம்பிய அவர், முதலில் ரூ.10 லட்சம் கொடுத்தார். ஒன்றரை மாதத்தில் அதற்கான லாபமாக ரூ.2.30 லட்சத்தை கொடுத்தனர். பின்னர், ரூ.23 லட்சம் பெற்று அதற்கு பங்குச்சந்தை லாபம் எனக்கூறி ரூ.12 லட்சம் கொடுத்தனர். இதற்கிடையே பங்குச்சந்தை இப்போது ஏற்றத்தில் உள்ளது. முதலீடு செய்ய ரூ.1 கோடி தேவைப்படுகிறது. இருமடங்கு லாபம் கிடைக்கும் என அவர்கள் இருவரும் சிவக்குமாரிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். மேலும், அந்த பணத்திற்கு ஈடாக சில சொத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளனர்.

அதன்படி, சிவக்குமார் மொத்தமாக ரூ.1 கோடியே 79 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே வேறு ஒருவரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில், சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். சரவணகுமார் துபாய்க்கு தப்பிச்சென்றார். இதையறிந்த சிவக்குமார், விசாரித்தபோது தன்னையும் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியம், சரவணகுமார் உள்பட 8 பேர் மீது மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''ஏற்கனவே மோசடி புகாரில் கைதாகி ஜாமீனில் உள்ள பாலசுப்பிரமணியத்தை மீண்டும் கைது செய்து விசாரிக்க உள்ளோம். துபாயில் தலைமறைவாக இருந்த சரவணகுமார், அங்குள்ள தமிழர்களிடமும் இதே போல் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் பதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரையும் கைது செய்ய இருக்கிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்