சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள், நிறுவப்படும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் உறுதியாக இணைத்திட வேண்டும்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 15 குதிரை திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 60, 70 மற்றும் 80 சதவீத மானியத்தில் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் (Safe Firka) இருத்தல் வேண்டும். இதரப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புகோரி ஏற்கெனவே விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்பு செட்டுகளை அமைத்து உடனடி பயன்பெறலாம். மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் நிறுவப்படும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் உறுதியாக இணைத்திட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவு விவசாயிகளுக்கு 60 சதவீதமும், ஆதிராவிடர், பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 70 சதவீதமும் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 80 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் https://pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ.- 9486480321), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ.- 7904713925) மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் திருச்செந்தூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ.- 9444413441) ஆகியோரைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.